மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.- (மத்தேயு 6:14,15)
சாமுவேல் ஹோம்ஸ் என்னும் மனிதன் தான் செய்த கொலை குற்றத்திற்காக கென்டகி (Kentucky) என்னும் இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனை காண அவனுடைய பாலிய நண்பர் வந்திருந்தார். அவர், மூழ்கிக் கொண்டிருந்த ஒருக் கப்பலில் இருந்து மக்களை காப்பாற்றியதறகாக சிறந்த மனிதர் என்கிற விருதை பெற்றிருந்தார். அவர், இந்த மனிதனுடைய நிலைமையைக் கண்டு, பரிதாபமுற்றவராக, அந்த மாநிலத்தின் கவர்னரிடம் கருணை மனு வேண்டி முறையிட்டார். அந்த கவர்னர், இந்த மனிதரின் நல்ல பெயருக்காக, அவர் செய்த நன்மையான காரியத்தை நினைத்து, சாமுவேலுக்கு விடுதலைக் கொடுத்தார். அந்த விடுதலைப் பத்திரத்தை பெற்றுக் கொண்டு சந்தோஷமாக சாமுவேலிடம் வந்த நண்பர், அதை அவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாக அவரிடம் ஒருக் கேள்வியைக் கேட்டார். ‘நீ விடுதலையாகி வெளியே வந்தவுடன் என்னச் செய்யப் போகிறாய்’ என்றுக் கேட்டார். அதற்கு சாமுவேல், ‘நான் வெளியே வந்தவுடன் எனக்கு இந்த தண்டனையைக் கொடுத்த நீதிபதியையும், எனக்கு விரோதமாக சாட்சிச் சொன்ன மனிதனையும் கொன்றுவிட்டுதான் மறுவேலை’ என்றுக் கூறினான். அதைக் கேட்ட அந்த நண்பர், மனம் வேதனைப்படடவராக, எதையும் கூறாமல், வெளியே வந்து, விடுதலைப் பத்திரத்தை
சுக்கு நூறாக கிழித்துப் போட்டார்.
சாமுவேல் மற்றவர்களை மன்னிக்காததால், அவனுக்கும் மன்னிப்பு கிடைக்கவில்லை.
நாம் மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யும் குற்றங்களை மன்னித்தால்தான் நம் பாவங்கள் நமக்கு மன்னிக்கப்படும். (மத்தேயு 18:23-35) வரையுள்ள வசனங்களை நாம் வாசிக்கும்போது, இயேசுகிறிஸ்து ஒரு உவமையைக் கூறுகிறார். ஒரு ராஜா தனக்கு கீழ் வேலை செய்த ஒருவன் பெற்றிருந்த பதினாயிரம் தாலந்து கடனை அவன் ராஜாவிடம் வேண்டிக் கொண்டபோது அவன்மேல் மனதிரங்கி, அவன் கடன் முழுவதையும் மன்னித்தார். ஆனால் அந்த மனிதனோ, தனது உடன்வேலைக்காரன் நூறு வெள்ளிப்பணமாகிய கடனை கொடுக்கவில்லை என்பதற்காக, அவன் அந்தக் கடனை கொடுத்து தீர்க்குமளவும், அவனை காவலில் போட்டான். தனது கடனை ராஜா மன்னித்ததுப் போல இவனும் மற்றவனுடைய கடனை மன்னித்திருக்க வேண்டும். ஆனால் அவன் மன்னிக்காததை ராஜா கேள்விப்பட்ட போது, மிகவும் கோபமடைந்து, தன்னிடம் பதினாயிரம் கடன் வாங்கியிருந்த அவனை உபாதிக்கிறவர்களின் கைகளில் ஒப்புவித்து, அவன் அந்த பதினாயிரம் கடனையும் கொடுத்து முடிக்கும் வரைக்கும் அவனை சிறையிலிட்டான். நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் (மத்தேயு 18:35) என்று இயேசுகிறிஸ்து கூறினார்.
சில கிறிஸ்தவர்கள், மற்றவர்கள் மேல் உள்ள கோபத்தினால், நான் சாகும் வரைக்கும் அந்த மனிதனின் முகத்தில் கூட முழிக்கமாட்டேன் என்றுச் சொல்வார்கள். சிலர், என் சாவுக்குக்கூட அவன் வரக்கூடாது என்று சொல்வார்கள். அவர் செத்தப்பின் யார் வந்தாலும் வராவிட்டாலும் அவருக்கா தெரியப் போகிறது?
தேவன் கிருபையாக நம் பாவங்களை மன்னித்து இருக்க, நாம் நம்முடைய ஈகோ பிரச்சனையில் மற்றவர்களை மன்னிக்க தவறி விடுகிறோம். அல்லது, நமது கோபம் அந்த அளவு பற்றி எரிகிறது. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்| என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது.
நாளை நமக்கு என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. தவறி நம் உயிர் போனால், மன்னிக்காமலே போய்விடுவோமில்லையா? அதினிமித்தம் பரலோக ராஜ்ஜியத்திற்கு நாம் போக தடை இருக்குமென்றால், ஏன் இப்போதே மன்னித்து, அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது?
ஒரு சிலருக்கு மற்றவர்களை மன்னிக்காததால் உடலில் நோய்கள் ஏற்பட்டதுண்டு. அவர்கள் என்று அவர்ளை மன்னிக்கிறார்களோ அன்று அவர்களுடைய நோயும் தீர்ந்துப் போகும். ஏன் வீணாக நம் சரீரங்களில் வேதனைப் பட வேண்டும்? யாவரோடும் சமாதானமாயிருக்க நாடுவோம். மற்றவர்களை மன்னிப்போம். தீர்க்காயுசோடு வாழ்வோம். தேவ சமாதானம் நம் இருதயங்களில் ஆள்வதாக.
மனதுருக்கம் உடையவரே - இயேசு
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே
ஜெபம்:
எங்களை மன்னித்து, எங்களை உம்முடைய பிள்ளைகளாய் மாற்றியிருக்கிற எங்கள் நல்ல தெயவமே, உம்மைத் துதிக்கிறோம். அப்பா, நீர் எங்களை மன்னித்ததுப் போல நாங்களும் மற்றவர்களை மன்னிக்கவும், அவர்களோடு சமாதானமாயிருக்கவும் எங்களுக்கு ஞாபகமூட்டும். நாங்கள் சுகவீனர்களாக போய் விடாதபடி மற்றவர்களுக்கு மன்னிக்க எஙகளுக்கு உதவிச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
|
|

No comments:
Post a Comment