நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
- (மத்தேயு 7:3-5).
ஒரு பெண் கடைக்கு சென்று, பொருட்கள் வாங்கப் போகும்போது, வழியில், ஒரு பால் பொருட்கள் விற்கும் கடையில் (Cheese) சீஸ் ஒரு சிறிய பாக்கெட் வாங்கி அதை தன் கையில் இருக்கும் கைப்பையில் பணத்தோடுக் கூட வைத்து மற்றக் கடைகளுக்குச் சென்று, பொருட்களை வாங்க ஆரம்பித்தாள். அந்த சீஸ் உருகி, பணத்தை நனைக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு தடவையும் அவள் பணத்தைக் கொடுக்கும்போது, வருகின்ற நாற்றத்தினால், அவள் அங்கிருக்கும் பணியாளர்களிடமிருந்துதான் வருகிறது என்று நினைத்து, எப்படி இப்படி நாற்றம் எடுக்கும் ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள்? என்று நினைத்தவளாக, பணத்தைக் கொடுத்து வெளியே வந்தாள்.
கடைசியாக, தன் வீட்டை அடைந்து, சாவியை எடுக்க தன் கைப்பையை திறந்த போது, அவளால் தாங்க முடியாத நாற்றம். தன்னிடம் இருந்துதான் நாற்றம் வருகிறது என்று அறியாதவளாக, மற்றவர்களை குறைச்சொல்லிக் கொண்டு இருந்ததை நினைத்து வெட்கிப் போனாள்.
மற்றவர்களிடம் குறைகளைக் கண்டுபடிப்பது நமக்கு எத்தனை எளிதாக இருக்கிறது? மற்றவர்களை குறைச் சொல்வதற்கு முன், நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அறிவது மிகவும் முக்கியம். நான் வேலைச் செய்யும் டிபார்ட்மெண்டில், தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரி, தினமும் காலையில் எங்களைக் கூட்டி, அப்படிச் செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவார்கள். எல்லாவற்றையும் சுத்தமாக இருகக் வேண்டும் அப்படியில்லாவிட்டால் உங்களது ரிப்போர்ட்டில் எழுதப்படும் என்றெல்லாம் அந்தக் கூட்டத்தில் எச்சரிப்பார்கள். ஆனால், அவர்களுடைய அறைக்கு யாரும் செல்ல முடியாது. அந்த அளவு குப்பையும், அழுக்கும் சேர்ந்திருக்கும். முதலில் உன் அறையிலிருக்கிற அழுக்கை எடுத்துப் போடு, பின் மற்றவர்களை கண்டிக்கலாம். அதைத்தான், இயேசுகிறிஸ்து, ‘முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்’ என்றுக் கூறினார்.
நமக்கு தேவன் விரல்களைப் படைத்தது, மற்றவர்களை விரல் நீட்டி, குறறம் சாட்டுவதற்கு அல்ல, அவர்கள் விழும்போது, அவர்களை தாங்குவதற்காகத்தான். மற்றவர்கள் விழும்போது அவர்களைத் தாங்குவோம். அவர்களைக் குற்றம் சாட்டி, அவர்கள் வாழ்க்கையை கஷ்டத்திற்குள்ளாக மாற்றாதபடி, அவர்கள் குற்றம் சாட்டுவதற்க்கு முன், நாம் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ முடியுமா என்று வினாடி யோசித்து, முடிந்தால் அதைச் செய்வோம். அப்போது அவர்களுடைய ஆசீர்வாதமும் கிடைக்கும், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்தோம் என்கிற திருப்தியும் எற்படும்.
சபைகளிலும், சக விசுவாசிகளைக் குறைகூற முற்படுவதற்கு முன் நாம் எல்லாவிதத்திலும் குறைவற்றவர்களாக இருக்கிறோமா என்று ஒரு வினாடி யோசிப்போம். ‘ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’ - (ரோமர் 2:1-2) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஆகையால் மற்றவர்களைக் குறித்து குறைசொல்லாதபடிக்கு நாம் எச்சரிக்கையாக இருந்து, தேவனுடைய கிருபையை பெற்றுக் கொள்வோமாக!
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்
இராஜா வருகிறார் ஆயத்தமாவோம்
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்லுவோம்
ஜெபம்:
எங்கள் கன்மலையும் மீட்பருமாகிய கர்த்தாவே, உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் எந்தவிதத்திலும் மற்றவர்களை குறறம்சாட்டாதபடி, அதற்கு முன்பு எங்களையே ஆராய்ந்து பார்க்க கிருபைச் செய்யும். அநியாயமாய் மற்றவர்களை குற்றவாளிகளாக தீர்த்து, தேவனின் நியாயத்தீர்ப்பைப் பெற்றுக் கொள்ளாதபடி எங்களைக் காத்துக் கொள்ள உதவிச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
|
|
No comments:
Post a Comment