அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல்
ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். - (யோவான் 14:6).
நாம் வாழும் இந்த உலகத்தில் ஏராளமான மதங்களும் மார்க்கங்களும் இருந்தாலும் இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். அவரையன்றி நாம் ஒருபோதும் பிதாவினிடத்தில், பரலோகத்தில் சேர முடியாது. எல்லா மதங்களும் சொர்க்கத்திற்கு செல்லும் வழியைக் காட்டுகின்றனவே தவிர ஒரு கடவுளும் இப்பாவ உலகில் வந்து, பாடுபட்டு, தம் இரத்தத்தை சிந்தி, இரட்சிப்பை இலவசமாக சம்பாதித்துக் கொடுத்து போகவில்லை. இயேசுகிறிஸ்துவே அதைச் செய்தார்; ஆகவே அவரே நம் வழியும் ஜீவனுமாயிருக்கிறார்.
ஆனால் இதை அறியாதபடி ஒவ்வொரு நாளும் மடிகிற மக்கள் எத்தனைப் பேர்?
ஒரு வாலிபன் கரைக்கு 30 அடி தூரத்தில் நீந்தியபடியே, “கரை எங்கே உள்ளது" என்று சத்தமிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். கரைக்கு இவ்வளவு பக்கத்தில் இருந்துக் கொண்டு எப்படி இவன் கேட்கிறான் என்று, மற்றவர்கள் யாரும் அவனை சட்டைச் செய்யவில்லை. சற்று நேரம் கழித்து, ஒரு வாலிபன், அவனுடைய சத்தத்தைக் கேட்டு அவனக்கு உதவி செய்ய அவனை நோக்கி விரைந்தான். ஆனால் அந்தோ! அந்த வாலிபன் ஏற்கனவே மூழ்க ஆரம்பித்திருந்தான். மற்றவர்களின் உதவியுடன் அவனை கரைக்கு இழுத்து வந்தார்கள். ஆனால் என்ன பிரயோஜனம்? அவன் மரித்து விட்டான். பின்னர்தான் தெரிய வந்தது அவன் குருடனென்று.
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2 கொரி 4:4).
அப்படி பிசாசானவன் குருடாக்கி இருக்கிற மக்களின் கண்களை திறப்பது நமது கடமையல்லவா?
சென்னைக்குச் செல்லும் இரயில் வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டு, இது என்னை கேரளாவிற்கு கொண்டுச் சேர்க்கும் என்று உட்கார்ந்திருந்தால், அது கேரளாவிற்கு கொண்டுப் போய் சேர்க்குமா? அது சென்னைக்குத் தான் கொண்டு போய் சேர்க்கும். அது போல எல்லா மதங்களும் நம்மை பரலோகத்திற்கு கொண்டு போய் சேர்க்காது. கிறிஸ்துவே வழி. அவரை மற்றவர்களுக்கு காட்டும் திசைக்காட்டியாக நாம் இருப்போமாக.
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
அவரன்றி மீட்பு இல்லையே!
ஜெபம்:
எங்கள் நல்ல தகப்பனே! இயேசுவையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்கிற உண்மையான் சத்தியத்தை உலகிற்கு தைரியமாக கூற எங்களை பெலப்படுத்தும். அழிந்துக் கொண்டிருக்கும் ஆததுமாக்களை உம்மிடம் சேர்க்க உதவி செய்யும். எங்கள் விண்ணப்பத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
|
|

No comments:
Post a Comment