Saturday, 3 March 2012

ஏழு முத்திரைகளின் நியாயத்தீர்ப்பு -பாகம்- 2


அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். - (வெளிப்படுத்தின விசேஷம் 6:9)
நேற்றைய தொடர்ச்சி...


ஐந்தாம் முத்திரை: மற்ற நான்கு முத்திரைகளைப் பார்க்கிலும் இந்த ஐந்தாம் முத்திரை வித்தியாசமானது. அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள், அவனால் கொல்லப்படுவர். அவர்களை தேவன் தனியாக வைத்துக் கொள்வார் என்று எழுதியிருந்தேன். அப்படிக் கொல்லப்பட்டவர்களின் கதறலே இந்த முத்திரை ஆகும். ‘அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள் பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது’ என்று வெளிப்படுத்தின விசேஷம் 6:9-11 ல் காண்கிறோம்.

அவர்கள், தேவனை நோக்கி மகா சத்தமிட்டு கதறுகிறார்கள். அப்போது தேவன், அவர்களைப் போல கொலை செய்யப்பட போகிற அவர்களுடைய சகோதரர்கள் தொகை நிறைவேறுமளவும், அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவர்கள் அப்படி கூப்பிட்டும் தேவன் தீர்க்கதரிசனத்தின் நாட்கள் நிறைவேறுமளவும் அவர் ஒன்றும் செய்யாமல் இருக்கிறார். ஒரு தடவை அந்திக்கிறிஸ்துவின் ஏழு வருடங்கள் ஆரம்பிக்கும்போது அந்த ஏழு வருடங்களும் முடிந்தபிறகே, அது முடிவடையும். அதுவரை அவர்கள் பொறுத்திருக்கவேண்டும்.

நாத்திகர்களும், கர்த்தரை விசுவாசியாதவர்களும், தாங்கள் பிறந்திருக்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவு, அவர்களுடைய உபத்திரவம் அதிகமாயிருக்கும். கர்த்தரை ஏற்றுக் கொண்டு அவரோட இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட்ட அவருடையவர்கள், உலகத்தில் நடைபெற இருக்கும் இந்த பயங்கரங்களை பார்க்க தேவன் அனுமதிப்பார் என விசுவாசிக்கிறேன்.

ஆறாம் முத்திரை: அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று. அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின. பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.- (வெளிப்படுத்தின விசேஷம்: 6:12-17)

இந்த ஆறாம் முத்திரையில் தேவன் தாமே செயலிலே இறங்குகிறார். உலகத்தில் மிகப் பெரிய பூமி அதிர்ச்சி ஏற்படும். அதனுடைய சக்தி மிகவும் அதிகமாய் இருக்கிறபடியால், மலைகளும், தீவுகளும் தங்கள் தங்கள் இடங்களைவிட்டு, அகன்று போகும். இவற்றை பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகளும் காணும்போது, இது தேவனிடமிருந்து வருகிற கோபாக்கினை என்று அறிந்துக் கொள்வார்கள். அதனால் அவர்கள் குன்றுகளிலும், மலைகளிலும் ஒளிந்துக் கொள்வார்கள். சூரியன் கறுத்து, சந்திரன் இரத்தம் போல மாறி, நட்சத்திரங்கள், கீழே உதிரும்போது, சர்வ வல்லமையுள்ள தேவன் ஒருவர் உண்டு என்பதை உலகத்தில் வாழும் பாவம் நிறைந்த மக்கள் உணர்ந்துக் கொள்வார்கள். ஆனாலும், தங்கள் பெருமையினாலும், அகங்காரத்தினாலும், பாவங்களினாலும் அந்த ஜனம் இன்னும் தேவனை தூஷிப்பார்களேத் தவிர அவர்கள் கர்த்தரை பணிந்துக் கொள்ள மாட்டார்கள்.

ஏழாம் முத்திரை: அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று. பின்பு, தேவனுக்கு முன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று. பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின. அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். - (வெளிப்படுத்தின விசேஷம்: 8:1-6)

இந்த முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் அரைமணிநேரம் அமைதல் உண்டாயிற்று. இது அடுத்து வரப் போகிற ஏழு எக்காளங்களின் நியாயத்தீர்ப்புக்கு முன் இருக்கப் போகிற அமைதியாகும். சில நேரங்களில், புயலுக்கு முன் அமைதி இருப்பதுப் போல மீண்டும் வரப்போகிற பயங்கரமான நிகழ்ச்சிகளுக்கு முன்பாக அரைமணிநேரம் அமைதி உண்டாகிறது. பிறகு ஏழு தூதர்கள் தங்களை ஆயத்தப்படுத்த ஆரம்பிப்பார்கள். சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் ஒரு தூதனுக்கு கொடுக்கப்படுகிறது. அது தேவனுக்கு முன்பாக எழும்பிற்று. அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின. ஆகவே இந்த முத்திரை உடைக்கும் போதும் மீண்டும் பூமியதிர்ச்சி உண்டாயின. அந்த ஜெபங்கள், தேவனிடம் தங்கள் இரத்தபழிக்காக தங்களை கொன்றவர்களிடம் பழி வாங்க வேண்டும் என்கிற ஜெபமாக இருக்கலாம். தேவன் தன் முழு சினத்தோடு தன்னை விசுவாசித்தவர்களை கொன்றதினிமித்தம் அடுத்த ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகளை ஆரம்பிக்கிறார். அப்போது ஏழு தூதர்களும் தங்கள் எக்காளங்களை முழங்க ஆயத்தமாகிறார்கள்.

இந்த ஏழு எக்காள நியாயத்தீர்ப்பு ஆரம்பிக்குமுன் இன்னும் சில காரியங்கள் உலகத்தில் நடைபெறுகின்றன. அவை முதல் மூன்றறை வருடங்களில் நடக்க உள்ளன.

எருசலேமில் தேவாலயம் திரும்ப கட்டப்படும். உபத்திரவ காலம் ஆரம்பிக்கும்போது, தேவாலயத்தில் பலிகள் செலுத்தப்பட்டு, ஆராதனைகள் ஆரம்பமாகும். மகா பரிசுத்த ஸ்தலம், மேசியாவின் வருகைக்காக ஆயத்தமாக்கப்படும். தற்போது, தேவாலயம் முதலில் இருந்த இடத்தில் இஸ்லாமியரின் மசூதி உள்ளது. அந்திக்கிறஸ்து வரும்போது அவன் யூதர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் உடன்படக்கை செய்ய வைத்து, அந்த இடத்தில் எருசலேம் தேவாலயம் கட்டப்பட உதவி செய்வான். யூதர்கள் அதினிமித்தம் மகிழ்ந்து அந்திக்கிறிஸ்துவை தங்கள் தலைவனாக ஏற்றுக் கொள்வார்கள் என்று வேத வல்லுநர்கள் கூறுகின்றனர். யூதர்கள் தங்கள் தேவாலயம் கட்டப்பட வேண்டும் என்று எத்தனையோ வருடங்களாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். ‘அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி’.. (தானியேல் 9:27)

அந்திக்கிறிஸ்து, ஆட்சிக்கு வந்து, பத்து நாடுகளுடன் கூட்டு வைத்து, உலக பொருளாதாரத்தை தன் கையில் வைத்துக் கொண்டு, இஸ்ரவேலை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, தன் முத்திரையை உலக முழுவதிலும் அமுல் படுத்த துவங்குவான். அதை தரிக்காதவர்களுக்கு உபத்திரவம் தொடங்கும்.

1,44,000 யூதர்கள், தேவனால் முத்திரையிடப்பட்டு, உபத்திரவ காலத்திற்கு அவர்கள் தப்புவார்கள். ‘முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்’ - (வெளி 7:4). இந்த 1,44,000 பேர் தங்கள் சபைதான் என்று சொல்லும் கூட்டம் இப்போது உலகத்தில் உண்டு. ஆனால் வேதம் தெளிவாக சொல்கிறது, அது இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் இருந்து தெரிந்துக் கொள்ளப்பட்ட 12,000 பேர்கள் என்று. ஓவ்வொரு கோத்திரத்திலும் இருந்து 12,000 பேர் தெரிந்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற இஸ்ரவேல் மக்கள், கடைசி மூன்றறை வருடங்கள் அந்திக்கிறிஸ்துவின் கைகளுக்கு தப்பும்படியாக வனாந்திரத்திற்கு ஓடிப் போவார்கள். ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. - (வெளிப்படுத்தின விசேஷம். 12:14) பெரிய கழுகின் சிறகுகள் அவர்களை காக்கும்படி ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கும்.

எண்ணெய் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அந்திக்கிறஸ்து அதை தன் கைகளில் தக்க வைத்து, தன் இஷ்டப்படி உலகத்தை ஆட்டிப் படைப்பான். மட்டுமல்ல, இன்டெர்நெட், சேட்டிலைட், நியூக்கிளியர் ஆயுதங்கள் எல்லாம் அவன் கைகளின் கீழ் இருக்கும்.

இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் உலகமெங்கும் பிரசங்கிக்கப்படும். புறஜாதிகள், கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள மறுப்பதால், யூதர்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்.

இதுவரை இருந்த உபத்திரவ காலம் மாறி, மகா உபத்திரவ காலமாகிய கடைசி மூன்றறை வருடங்கள் ஆரம்பமாகும்.

அடுத்தக் கட்டுரையில் ஏழு எக்காளங்களைக் குறித்துக் காண்போம். இங்கு எழுதப்பட்டிருக்கும் ஒன்றும் கட்டுகதைகளல்ல. சத்திய வேதத்தில் எழுதப்பட்டிருக்கிற உண்மையான சத்தியமாகும். இவையெல்லாம் ஏற்றக் காலத்தில் நிச்சயமாக நடந்தேறும். கர்த்தருடைய வார்த்தை ஒருநாளும் பொய்சொல்லாது. இவைகளுக்கு விலகி நாம் தப்பித்துக் கொள்ள தேவன் தாமே கிருபை செய்வாராக. ஆமென்.

ஜெபம்:
எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல தெய்வமே, உம்மைத் துதிக்கிறோம். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் என்று சொன்னீரே, இதோ இவைகளை நாங்கள் வாசிக்கும்படியான கிருபைகளை எங்களுக்கு கொடுத்தீரே உமக்கு நன்றி. இதை வாசிக்க மட்டுமல்ல, அதைக் கைக்கொள்ளவும் எங்களுக்கு கிருபைத் தாரும். வரப்போகும் கொடிய காலங்களுக்கு நாங்கள் தப்பித்துக்கொள்ள எங்களுக்கு கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment