Tuesday, 1 May 2012

மிருகத்தின் முத்திரை – பாகம் - 3


பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன;
அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. -
(வெளிப்படுத்தின விசேஷம் 13:1-2).


வலுசர்ப்பம் சாத்தானானவன் என்ற நேற்றைய தினம் நாம் பார்த்தோம். அது தன் பலத்தையும், தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அந்திக்கிறிஸ்துவுக்கு கொடுக்கிறதை நாம் மேற்கண்ட வசனத்தின் மூலம் காண்கிறோம். மேலும், பரிசுத்தவான்களோடே  
யுத்தம்பண்ணி
 அவர்களை ஜெயிக்கும்படிக்கு  அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொருகோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள்யாவரும் அதை வணங்குவார்கள். கடைசியில் இயேசுகிறிஸ்துவின் பகிரங்க வருகையில் அவர் அவனோடு போரிட்டு அவனை ஜெயிக்கிற வரைக்கும் அவனை ஜனங்கள் வணங்குவார்கள்.

நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறார்கள். இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான் (வெளிப்படுத்தின விசேஷம் 17:12-14). இதன் மூலம் அந்திக்கிறிஸ்துவுடன் பத்துநாடுகளாகிய European union-ம் சேர்ந்து ஏழு வருடங்கள் உலகத்தை ஆண்டு, முடிவில் கிறிஸ்துவாகிய ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்.

அந்திக்கிறிஸ்து ஆளும் அந்த ஏழு வருடங்களில், தேவனுடைய மூன்று வகையான நியாயத்தீர்ப்புகள், இந்த உலகத்தை அசைக்கும் அவையாவன:

1. ஏழு முத்திரைகள்
2. ஏழு எக்காளங்கள்
3. ஏழு கோபக் கலசங்கள்

இந்த நியாயத்தீர்ப்புகள் வரும்போது உலகத்தில் வாழும் மக்களுக்கு ஐயோ! இந்த நியாயத்தீர்ப்புகள் நடக்கும்போது இந்த உலகத்தில் சபை இருக்காது. அது இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்படும் என பல வேத வல்லுநர்களும் கூறுகின்றனர். எங்களுடைய விசுவாசமும் அதுவே. ஏன் இப்படிப்பட்ட நியாயத்தீர்ப்புகள் உலகத்திற்கு தேவனிடமிருந்து கடந்து வருகின்றன என்றால், முதலாவதாக, சபை எடுத்துக் கொள்ளப்பட்டு, இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட மக்கள் இந்த உலகத்தை விட்டு, போனப்பிறகு, இந்த உலகத்தில் வாழுகிற் மக்கள் முதல் தடவை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை தங்கள் பிடிவாதத்தினால், ஏற்றுக் கொள்ளாமலிருந்தால் தேவனுடைய அநாதி நேசத்தினால், அவர்களுக்கு மற்றொரு சந்தர்ப்பம் கொடுக்கப்படும். வரப்போகிற அந்த நியாயத்தீர்ப்புகள், மிகவும் கொடிதாகவும் தேவனுடைய கரத்திலிருந்தும் வரப்போகிறபடியால், அதை அனுபவிக்கிற மக்கள், தேவன் தருகிற மற்றொரு கடைசி சந்தர்ப்பத்தை நழுவ விட்டு, தேவனை தூஷிப்பார்களேத்தவிர தங்கள் பாவ வாழ்க்கையை விட்டு; மனந்திரும்ப மாட்டார்கள். இயேசுகிறிஸ்துவின் பகிரங்க வருகைக்கு முன் இவர்கள் மனந்திரும்பாவிட்டால் அதற்குப்பின் அவர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர மாட்டாது. இதற்குப் பின் அவர்கள் நித்திய நரகத்திற்கு தள்ளப்படுவார்கள்.

இரண்டாவதாக, தம்மை ஏற்றுக் கொள்ளாத பாவிகள், அகங்காரக்காரர்கள், வலுசர்ப்பமாகிய சாத்தான், அந்தக்கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசி இவர்கள் மேல் தேவ கோபாக்கினை வரும். உபத்திரவ காலமாகிய நியாயத்தீர்ப்பின் காலத்தில், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களை, தனது முத்திரையை ஏற்க மறுத்த அவர்களை, அந்திக்கிறிஸ்து கொலை செய்வான். அதனாலும் தேவனுடைய கோபம் அவர்கள் மேல் கடந்துவரும்.

தேவன் நம்மேல் வைத்த அன்பினாலே தம்முடைய ஒரேப் பேறான தமது குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி, அவர் மூலம் இரட்சிப்பை இலவசமாக கொடுத்தார். ஆனால் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள், அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் உபத்திரவ காலம் மற்றும் மகா உபத்திரவ காலம் ஆகியவற்றில் சிக்கி தவிப்பார்கள். அவர்கள், அப்படி தவிக்கும்போதும், அவர்களுடைய இருதய கடினத்தினிமித்தம் கர்த்தரை ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். அடுத்தக் கட்டுரையில் அவருடைய ஒவ்வொரு நியாயத்தீர்ப்பைக் குறித்தும் காண்போம்.

ஜெபம்:
 எல்லா நன்மையான ஊற்றுக்கும் காரணராகிய நல்ல பிதாவே, உம்மை நாங்கள் துதிக்கிறோம். நீர் மனிதர்கள் மேல் வைத்த நேசத்தினால், அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு மற்றொரு சந்தர்ப்பத்தையும் தருகிறீரே உம்முடைய அன்பு அளவில்லாதது தகப்பனே. அதை உணர்ந்து, நீர் தந்திருக்கும் இந்தக் கிருபையின் காலத்திலேயே இரட்சிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் காணப்பட எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment