ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். - (வெளிப்படுத்தின விசேஷம் 6:1-2).
நேற்றைய தினம் தேவனின் கரத்திலிருந்து வரப்போகும் நியாயத்தீர்ப்புகள், அந்திக்கிறிஸ்து இந்த உலகத்தை ஆளப் போகும் ஏழு ஆண்டுகளில் உலகத்தை அசைக்கும் எனப் பார்த்தோம். அவை:
1. ஏழு முத்திரைகள்
2. ஏழு எக்காளங்கள்
3. ஏழு கோபக்கலசங்கள்
இதில் ஏழு முத்திரைகளைக் குறித்துக் காண்போம். இந்த ஏழு முத்திரைகளான நியாயத்தீர்ப்பு அந்திக்கிறிஸ்து ஆட்சிசெய்யப் போகும் முதல் மூன்றறை ஆண்டுகளில் (3½ Years) நடக்கும் என வேத வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு முத்திரையாக நாம் இப்போது காண்போம்.
1. முதல் முத்திரை: ‘ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்’ என வெளி 6:1-2ல் பார்க்கிறோம். இதில் ஆட்டுக்குட்டடியானவர் முத்திரையை உடைப்பதைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அதனால் தேவனின் அனுமதியுடனே இந்தக் காரியம் நடைபெறுகிறது. அதில், ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான் என்பது அந்திக்கிறிஸ்து உலகத்தில் வர இருப்பதைக் குறிக்கிறது. அந்த வெள்ளைக்குதிரையின் மேல் ஏறிவருபவன் அந்திக்கிறிஸ்து. அவன் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி வருவது அவன் சமாதானத்தின் தூதுவனாக, உலகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு முடிவு கொண்டு வருபவனாக, உலகத்தை அதன் மூலம் அவன் ஆட்சி செய்வபனாக இருப்பான் என்பதைக் குறிக்கிறது. அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது என்பது, தேவன் அவனுக்கு உலகத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆளும்படிக்கு அனுமதிப்பதால் அவனுக்கு கிரீடம் கொடுக்கப்படுகிறது. அவன் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான் என்பது, அவன் தனக்கு காலம் கொடுக்கப்பட்டவுடனே சற்றும் தாமதியாமல் பத்து நாடுகளுடனே கூட்டு வைத்து, உலகத்தை ஆளுவான் என்பதைக் குறிக்கிறது.
2. இரண்டாம் முத்திரை: அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. - (வெளி 6:3-4)
அந்திக்கிறிஸ்து இப்போது, வெள்ளை குதிரையிலிருந்து சிவப்புக் குதிரைக்கு மாறுகிறான். சிவப்பு குதிரை என்பது, அவன் தன்னை இப்போது மிருகத்தின் தன்மைக்கு மாற்றி, போர் தொடுப்பனாக, சண்டையிடுகிறவனாக மாறுவான் என்பதைக் குறிக்கிறது. அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது என்பதிலிருந்து தேவனுடைய அனுமதியுடனேயே அவனுக்கு பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துக் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்படும். அவன் சமாதானத்தை எடுத்துப் போடும்போது. பூமியிலுள்ளவர்கள், ஒருவருக்கொருவர் கொலைசெய்ய ஆரம்பிப்பார்கள். அவனுக்கு பட்டயம்கொடுக்கப்பட்டது என்பது அவன் ஒவ்வொரு மனிதனையும் தன் ஆட்சிக்கு வரும்படியாக அவர்களை கொலைசெய்யவும் துணிவதையும், அதற்காக அவன் எந்த போரையும் தொடுக்கவும், நாடுகளை தன் வசப்படுத்தவும் துணிவான் என்பதையும் குறிக்கிறது.
3. மூன்றாம் முத்திரை: அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடிவாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன் (வெளி 6:5-6)
அந்திக்கிறிஸ்து இப்போது, சிவப்புக் குதிரையிலிருந்து, கறுப்புக் குதிரைக்கு மாறுகிறான். இது, அவன் போர் தொடுப்பதினால் வரப் போகும் பஞ்சத்தையும், வறட்சியையம் உணவு பற்றாக்குறையையும் குறிக்கிறது. மக்கள் நாள் முழுவதும் தங்களுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய உணவிற்காக உழைக்க வேண்டும் என்றும், அப்போது ஒரு பணத்திற்கு ஒருபடி கோதுமையும் ஒரு பணத்திற்கு மூன்றுபடி வாற்கோதுமையும் கிடைக்கும். ஒரு பணம் என்பது ஒரு நாளின் சம்பளத்தைக் குறிக்கும். எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்பது, பணக்காரராய் இருப்பவர்கள் அப்படியே இருப்பார்கள் என்றும் மற்றவர்கள் அவர்களுக்கு அடிமைகளாக நாள் முழுவதும் உழைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அவனுடைய கையில் உள்ள தராசு அவன் தனக்கு ஏற்றபடி தனக்கு பிரியமானவர்களுக்கு பதவிகளையும் பணங்களையும் கொடுப்பான் என்பதைக் குறிக்கிறது.
4. நான்காம் முத்திரை: அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன் பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. - (வெளி 6:7,8)
இப்போது கறுப்பு குதிரையிலிருந்து, அந்திக்கிறிஸ்து மங்கின குதிரைக்கு மாறுகிறான். மங்கின நிறம், மரணத்தைக் குறிக்கிறது. பூமியிலுள்ள காற்பங்கு மக்களை பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், துஷ்ட மிருகங்களினாலும் கொல்லும்படியான அதிகாரம் அவனுக்கு கொடுக்கப்படுகிறது. மரணத்திற்கு பின் பாதாளம் சென்றது என்றுப் பார்க்கிறோம். பாதாளம் என்பது, அவிசுவாசிகள் போகும் இடமாகும். இது தற்காலிகமாக துன்பப்படும் இடம். அவிசுவாசிகள், மரித்த உடனே நரகத்திற்கு சென்று விடுவதில்லை. அவர்கள் ஆயிரம் வருஷ அரசாட்சிக்குப்பின் நடக்கும் நியாயத்தீர்ப்புக்குப்பின் செல்வார்கள். மரணத்திற்குப்பின் பாதாளம் சென்றது என்பது அவிசுவாசிகள் செல்லும் இடத்தைக் குறிக்கிறது. இதில் கிறிஸ்தவர்கள் அடங்க மாட்டார்கள் ஏனென்றால், இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் சபை எடுத்துக் கொண்டப்பின் இரட்சிக்கப்படும், விசுவாசிகள், அந்திக்கிறிஸ்துவினால் கொல்லப்படுவார்கள். தேவன் அவர்களை தனியாக வைத்துவிடுவார். அதைக் குறித்து பின் பார்ப்போம். ஆகவே, அவர்களும், பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும் கொல்லப்பட்ட பூமியின் கால்பங்கு மனிதரும் சேர்ந்து, உலகம் இதுவரை கண்டிராத அளவு அந்திக்கிறிஸ்துவினால் கொல்லப்படுபவர்கள் அதிகமாய் இருப்பார்கள். ஐந்தாம் முத்திரை மற்றவைகளிலிருந்து வேறுபடும். அதை நாளைய தினம் காண்போம்.
அந்திக்கிறிஸ்துவின் வருகை உலகத்திற்கு மிகவும் ஆபத்தானதாகவும், பயங்கரமானதாகவும் இருக்கும். இவற்றிற்கு நாம் தப்ப வேண்டுமானால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் கிருபையாக நமக்கு கிருபையின் காலங்களை தந்திருக்கிறார். இதிலேயே இரட்சிக்கப்பட்டு, அவருடைய இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட நாம் பாத்திரவான்களாக மாறுவோம். அதற்கு ஒரு சிறிய ஜெபத்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து செய்தால் போதும், நீங்கள் இரட்சிக்கபடுவீர்கள்.
கீழ்க்கண்ட ஜெபத்தை உள்ளத்திலிருந்து கூறுங்கள்:
ஜெபம்:
கீழ்க்கண்ட ஜெபத்தை உள்ளத்திலிருந்து கூறுங்கள்:
ஜெபம்:
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, இந்த வேளையில் உம்மை நோக்கி நாங்கள் பார்க்கிறோம். உலகம் மிகவும் பயங்கரமான சூழ்நிலைக்கு கடந்து வரப்போகிறது என்று ஒவ்வொரு முத்திரையை உடைக்கும்போதும் காண்கிறோம். அப்பா இவற்றை நாங்கள் சந்திக்காதபடிக்கு, இப்போதே எங்களை படைக்கிறோம். என்னுடைய பாவங்களை அறிக்கையிடுகிறேன். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி என்னை சுத்திகரிக்க வல்லது என்று நான் அறிந்து, அவருடைய இரத்தத்தினால் என்னுடைய பாவங்களை கழுவ என்னை அர்ப்பணிக்கிறேன். என்னுடைய பாவங்களை கழுவியருளும். இயேசுகிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன். தேவனுடைய ஒரேப் பேறான குமாரன் என்று விசுவாசிக்கிறேன். அவராலேயன்றி, இரட்சிப்படைவதற்கு வேறுநாமம் தரப்படவில்லை என்பதையும் விசுவாசிக்கிறேன். என்னுடைய பாவங்களை நீக்கி, என்னை கழுவி, என்னை சுத்திகரித்ததற்காக நன்றி. இயேசுவின் இரகசிய வருகையில் என்னையும் ஏற்றுக் கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
|
|

No comments:
Post a Comment