Wednesday, 8 August 2012

நிக் உஜிசி - Nick Vujicic


இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவான் 9:3)


உங்களில் எத்தனைப் பேருக்கு நிக் உஜிசி (Nick Vujicic) என்பவரைப் பற்றித் தெரியும்? அவருக்கு சிறுவயதில் இருந்து கைகளில் காயமோ, கால்களில் அடிபட்டதோ, முட்டி தட்டி விழுந்ததோ கிடையாது. ஏனென்றால் அவருக்கு இரண்டு கைகளும் கால்களும் கிடையாது. அவர் அப்படியே பிறந்தார். நாம் அவரைக் குறித்து பரிதாபப்படுவதற்கு முன்பு அவர் சொல்வதைக் கேளுங்கள்:

'கர்த்தர் நம் வாழ்வில் அவருடைய நோக்கமும் சித்தமும் இல்லாமல் எதையும் அனுமதிப்பதில்லை. எனது 15 ஆவது வயதில் நான் யோவான் 9ம் அதிகாரத்தைப் படித்தப்பின் தேவனுக்கு என்னை முற்றிலுமாய் அர்ப்பணித்தேன். அந்தப் பிறவிக்குருடன் ஏன் அப்படிப் பிறந்தான் என்பதைக் குறித்து, இயேசுகிறிஸ்து ‘தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்’  என்றுக் கூறினார். இப்போது எனது வாழ்விலும் மற்றவர்களை விட என்னை நான் இருக்கிறப்பிரகாரமாக உபயோகித்து, கர்த்தர் மகிமைப் படுவதை நான் காண்கிறேன்' என்றுக் கூறுகிறார். நிக், உலகம் முழுவதிலும் சென்று இயேசுகிறிஸ்துவின் அன்பையும், இரட்சிப்பையும் இன்றும் கூறி வருகிறார்.
'என்னுடைய இந்த நிலைமையிலும் என்னால் மற்றவர்களுக்கு பிரயோஜனமாயிருக்கவும், கர்த்தரை நான் விசுவாசிக்கவும் கூடுமானால் உங்களால் நிச்சயம் உங்கள் முழு சரீரத்திலும் இருந்து கர்த்தரை கனம் பண்ணவும், அவரை எந்த சூழ்நிலையிலும் விசுவாசிக்கவும் முடியும்'  என்று மற்றவர்களை அவர் ஊக்கப்படுத்துகிறார்.

நான் அவருடைய முதல் பிரசங்கத்தைப் பார்த்தபோது மலைத்துப் போனேன். எப்படி அவர் கைகளும் கால்களும் இல்லாமல், எந்த முறுமுறுப்போ கசப்போ முகத்தில் காட்டாமல், சந்தோஷமாய் கர்த்தருடைய செய்தியை கூடியிருக்கிற அத்தனைப் பேருக்கு முன்பாக சாதாரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டபோது என்னால் கர்த்தரை துதிக்காமல் இருக்க முடியவில்லை.

இன்று எத்தனைப் பேர் இரண்டு கைகளும் கால்களும் உடையவர்களாயிருந்து, ஆராதனை நேரங்களில் கைகளைக் கட்டிக் கொண்டு, வேடிக்கை பார்க்க வருகிறவர்களைப் போன்று நின்று கர்த்தரை ஆராதனை செய்யும்போது இந்த மனிதரை கர்த்தர் உபயோகிக்கும் விதத்தைக் கண்டு வியந்துப் போனேன். நமக்கு இரண்டு கைகளும் கால்களும் கொடுத்தத்ததற்கு கர்த்தருடைய நோக்கம் ஒன்று உண்டு. அவருக்கென்று அவற்றை உபயோகிப்போமா? இரண்டு கால்களும் இரண்டு கைகளும் இல்லாத மனிதரை தேவன் உபயோகிக்கக் கூடுமானால், நம்மையும் அர்ப்பணித்தால் நம்மையும் உபயோகிக்க தேவ்ன வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.

தேவன் நமக்கு கொடுத்த இரண்டு கால்களுக்காக, இரண்டு கைகளுக்காக, நம்மை முழுமையாக படைத்த அவருடைய கிருபைக்காக அவரைத் துதிப்போமா? எந்தவித குறையுமில்லாமல் நம்மைப் படைத்த தேவனை துதிப்போமா? அவருக்கென்று வாழ்வோம். அவருக்கென்று உழைப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!

  அன்புக் கூருவேன் இன்னும் அதிகமாய்
  ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
  முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
  முழு பெலத்தோடு அன்புகூருவேன்

ஜெபம்:
 எங்களை நேசிக்கிற எங்கள் நல்லதகப்பனே, உம்முடைய கிருபைகளுக்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அப்பா, இரண்டு கால்களும் இரண்டு கைகளும் இல்லாத நிக்கை உம்மால் உபயோகப் படுத்த முடியுமென்றால், எங்களையும் பயன்படுத்த உம்மால் கூடும் தகப்பனே. எங்களை படைக்கிறோம். எங்களை எந்த வித குறையுமில்லாமல் படைத்த உம் கிருபைக்காய் நன்றி. உமக்கென்று வாழ எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி.  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment